திருவிடைமருதூர்: சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று (செப்.03) கும்பகோணம் வந்திருந்தார். அவர் நேற்று இரவு கும்பகோணத்தில் தங்கி இருந்தார். இன்று (செப்.04) காலையில் நடை பயிற்சி மேற்கொண்டார். சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக நடந்து திருவிடைமருதூர் வந்தடைந்தார்.

அங்குள்ள அரசு மருத்துவமனை உள்ளே நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் நியமிக்க ஆணையிட்டதோடு மருந்து, மாத்திரைகள் இருப்பு எவ்வாறு உள்ளது எனவும் ஆய்வு செய்தார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.

அங்குள்ள சித்த மருத்துவ பிரிவில் ஆய்வு செய்த அவர் நோயாளிகள் எத்தனை பேர் வருகின்றனர் என்பதை எல்லாம் விசாரணை செய்து அங்குள்ள நிலவேம்பு கசாயம் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கொடுக்கிறீர்களா என கேட்டதோடு நிலவேம்பு கசாயத்தையும் அருந்தினார். பின்னர் அந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை, ஆய்வகம், எக்ஸ்ரே சென்டர் கட்டிடங்களை ஆய்வு செய்து பழைய கட்டிடங்களை இடிக்கவும் புதிய கட்டிடம் கட்டவும் ஆலோசனை செய்தார்.

நோயாளிகள் படுக்கை வரை சென்று நோயாளிகளிடம் மருத்துவமனை வசதி குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்யவும் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி