தஞ்சை: காவிரியில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்புத்துறையினர்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய தைப்பூச தீர்த்தவாரி காவிரியாற்றில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய ஆடுதுறை பேரூராட்சி, மருத்துவக்குடியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் முரளி (15) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் வந்திருந்தான். பின்னர் தீர்த்தவாரி முடிந்து நண்பர்களோடு காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தான். 

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீர்ச்சுழலில் சிக்கி அபாயகரமான நிலையில் மாட்டிக்கொண்டான். தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக ஓடி வந்து சிறுவனை மீட்டு சிபிஆர் முறையில் முதலுதவி அளித்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் அந்த சிறுவனை பிழைக்க வைத்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் முரளி சேர்க்கப்பட்டான். 

தொடர்ந்து கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உள் நோயாளியாக அந்த சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் முதலுதவி அளித்து காப்பாற்றியதால் பொதுமக்கள் அவர்களை பாராட்டினர். மேலும் தீர்த்தவாரி திருவிழாவிற்கு வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி