தஞ்சாவூர் நகரில் நாளுக்கு நாள் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் வண்டிக்காரத்தெரு, எம். கே. மூப்பனார் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்திற்கு, இடையூறாக சாலையில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. பகல், இரவு என எந்த நேரமும் நகர்பகுதி கடை வீதிகளில் சாவகாசமாக உலாவரும் கால்நடைகள், குதிரைகள் அங்கு தேங்கிக் கிடக்கும் காய்கறி, பழக்கழிவுகள், மளிகை கடைகளிலிருந்து வீசி எறியப்படும் கழிவுகளை தின்று வருகின்றன.
மேலும் சாலையில் குப்பைகளை கிளறி விடுகின்றன. பகலில் வலம் வரும் குதிரைகள் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு அளிக்கிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். மேலும் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொள்வதால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் பயத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.