தஞ்சை: கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் முதலமைச்சர்

சென்னையிலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வருகிறார். பின்னர், சாலை மார்க்கமாக வரும் அவர் மாலை 6 மணியளவில் டெல்டா பாசனத்துக்காக கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறார்.

இதையடுத்து, தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதல்வர் சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்களை சந்திக்கிறார். பிறகு பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். மீண்டும் இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை காலை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். பின்னர், மேல வஸ்தா சாவடியில் காலை 10 மணியளவில் நடைபெறும் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதனிடையே, தமிழ்ப் பல்கலைக்கழகப் பகுதியிலிருந்து தஞ்சாவூர் வரை வழி நெடுகிலும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாநகரம் யாழாக்கோலம் பூண்டுள்ளது. 2,000 காவலர்கள் பாதுகாப்பு: முதல்வர் வருகையையொட்டி, தஞ்சாவூர், கல்லணை உள்ளிட்ட இடங்களில் 9 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஏறத்தாழ 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி