தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் திருவலம்பொழில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் சீட்டு வழங்கப்படும் இடம், தொற்றுநோய் பிரிவு, புற நோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, ஆய்வகம் மற்றும் வருகைப் பதிவேடு, தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, திருவலம்பொழில் அங்கன்வாடி மையத்தின் வருகைப் பதிவேடு, உணவின் தரம், குழந்தைகளின் உயரம் மற்றும் எடை விவரம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், திருவலம்பொழில் ஊராட்சியில் அமையப் பெற்றுள்ள பொதுக்கழிப்பிடங்களை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது திருவையாறு வட்டாட்சியர் தர்மராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, சங்கரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.