தஞ்சை: பரபல ரௌடி தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி மகன் ஜெகன் தமிழரசன் (32). காவல் துறையின் சரித்திரப் பதிவேடு ரௌடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் புதன்கிழமை மாலை தஞ்சாவூர் அருகே ஞானம் நகர் 4-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள தனது நண்பர் கபில்ராஜ் வீட்டுக்குச் சென்றார். 

ஆனால், அங்கு கபில்ராஜ் இல்லாவிட்டாலும், அவருடைய நண்பர்கள் இருந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஜெகன் தமிழரசன் தனக்கு சிற்றுண்டி வாங்கி வருமாறு கபில்ராஜ் நண்பர்களிடம் கூறினார். இதையடுத்து நண்பர்கள் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினர். அப்போது அறை உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையின் உள்ளே மின் விசிறி மாட்டக்கூடிய கொக்கியில் தூக்கிட்ட நிலையில் ஜெகன் தமிழரசன் உயிரிழந்து தொங்கினார். இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி