தஞ்சை பூக்காரத்தெரு கோயில் இட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரேவதி என்பவர் 1,570 சதுர அடி இடத்தையும், பழனிவேல் என்பவர் 1,000 சதுரஅடி இடத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் இடத்தை மீட்பதற்காக ரேவதி, பழனிவேல் இருவரையும் இடத்தை காலிசெய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இடத்தை காலிசெய்யவில்லை. இதையடுத்து கடந்த 1998ம் ஆண்டு அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 30ம் தேதி அறநிலையத்துறை தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் ஹம்சன், ஆலய நிலங்கள் தாசில்தார் பார்த்தசாரதி, கோவில் தக்கார் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, தஞ்சை அறநிலையத்துறை ஆய்வாளர் பாபு, புதுப்பட்டினம் விஏஓ மற்றும் தெற்கு போலீசார் முன்னிலையில் வீடுகள் இடிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டு கோயில் செயலாளர் அய்யம்மாள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டது. இந்த இடத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி