காவிரி நதி நீர் பங்கீட்டை முடக்கக்கூடிய மேக்கேதாட்டு அணையை அமைக்க விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு காவிரி நீர் பங்கீட்டில் முறையாக நடந்து கொள்வதில்லை என்றும், மேக்கேதாட்டு அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்தது கண்டனத்துக்குரியது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். உச்ச நீதிமன்ற அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். குணசேகரன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பி. எஸ். மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.