தஞ்சாவூரில் கலம்காரி ஓவிய செயல்முறை பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில், புவிசார் குறியீடு பெற்ற கருப்பூர் கலம்காரி ஓவிய செயல்முறை பயிற்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதந்தோறும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் செயல் விளக்க பயிற்சி நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கருப்பூர் கலம்காரி ஓவிய செயல்முறை பயிற்சி நேற்று நடைபெற்றது. 

புராணக் கதைகளை இயற்கை மூலிகை வண்ணங்களைக் கொண்டு துணிகளில் வரைவதே கருப்பூர் கலம்காரி ஓவியம். இந்த ஓவியங்கள், தேர்ச் சீலைகள், தோரணங்கள், கோயில்களில் காடா துணியில் கையால் தீட்டப்படுபவை. மூங்கில், ஈச்சம், பனை, தென்னை மரக் குச்சிகளால் இயற்கை வண்ணங்களை தயாரித்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் தீட்டப்படுகின்றன. திருப்பனந்தாள் ஒன்றியம் சிக்கல்நாயக்கன்பேட்டையைச் சேர்ந்த கருப்பூர் கலம்காரி ஓவியர் ராஜ்மோகன் எம்பெருமாள் பயிற்சி அளித்தார். 

சரஸ்வதிமஹால் நூலகத்தின் முன்னாள் காப்பாளர் பெருமாள், பயிற்சியைத் தொடங்கி வைத்தார். பயிற்சியில் 60 பேர் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்திருந்தார்

தொடர்புடைய செய்தி