தஞ்சாவூர் சரகத்தில், போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் 589 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவானது, நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே, அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகள் அழிக்கும் கூடத்துக்கு தஞ்சாவூர் 536 கிலோ, மயிலாடுதுறை 9 கிலோ, நாகப்பட்டினம் 11 கிலோ, திருவாரூர் 33 கிலோ என அந்தந்த மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 589 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியா உல்ஹக், அழிக்கப்பட உள்ள கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு, அந்த மாவட்ட காவல்துறையினரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். அதன் பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் அனைவரும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் கஞ்சாவை அழிக்கும் பணியை டிஐஜி கொடியசைத்து தொடங்கி வைத்து, அதற்கான இயந்திரத்தில் கஞ்சா பண்டல்களையும், மூட்டைகளையும் போட்டார். தொடர்ந்து நவீன இயந்திரத்தில் கஞ்சா முழுவதும் தீயிட்டு அழிக்கப்பட்டது.