தஞ்சை ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இளநிலை உதவியாளர் அந்தஸ்தில் காலமுறை ஊதியம், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு, பெண்களுக்கு மகப்பேறு, மாதவிடாய் கால விடுப்புகள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். தள்ளுமுள்ளுவை அடுத்து, மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணிகள் பாதிக்கப்பட்டன.