தஞ்சை: தேங்காய் விலை கிடு,கிடு உயர்வு; கிலோ ரூ.50க்கு விற்பனை

தஞ்சாவூர் உழவர் சந்தையில் தேங்காய் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 50க்கு விற்பதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் அடுத்து நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் உழவர் சந்தை உள்ளது.

அங்கு பேராவூரணி, திருவையாறு, திருப்பந்துருத்தி, கண்டியூர், கல்யாணபுரம், ஒரத்தநாடு, மேல உளூர், மருங்குளம், வடக்குப்பட்டு, பொன்னவரை ஆகிய ஊர்களில் தென்னை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் தேங்காய்களை சந்தைக்கு கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை
செய்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்கின்றனர்.

கடந்த வாரம் தினசரி 1. 5 டன் தேங்காய் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் வியாபாரம் செய்தனர். சில நாட்களாக வரத்து மிகவும் குறைந்து 500 கிலோவில் இருந்து 600 கிலோ வரை வந்தது. இதனால் தேங்காய் விலை கிடு கிடு என உயர்ந்து ஒரு கிலோ ரூ. 50க்கு விற்கப்பட்டது. ரூ. 10க்கு விற்பனை செய்யப் பட்ட சிறிய தேங்காய் ரூ. 15 க்கும், ரூ. 15க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ. 20-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ. 25க்கும், ரூ. 25க்கு விற்கப் பட்ட தேங்காய் ரூ. 30க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி