பேராவூரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பைகளை கொண்டு செல்லும் புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு தினசரி பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், தூய்மைப் பணியாளர்கள் இல்லை, கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளால் கூறப்பட்டு வந்த நிலையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அமரவைத்து அழைத்துச் செல்லப்படும் ஸ்ட்ரெச்சர் வண்டியில், குப்பைக் கூடையை பணியாளர் ஒருவர் வைத்து தள்ளிச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் பொன்காடு ரஹீம் கூறியது: நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சமூக நல அமைப்புகள் ஸ்ட்ரெச்சர் வண்டியை வழங்குகின்றன.
அதன் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் குப்பைக்கூடையை வைத்து தள்ளிச் செல்லும் வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த வண்டியிலேயே நோயாளிகளையும் கொண்டு செல்லும் நிலை உள்ளது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு, நோயாளிகளை குப்பைக் கூடைக்கு சமமாக நினைக்கின்றார்களோ என தோன்றுகிறது.