சாலையில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் புகை மூட்டம்

மதுக்கூர் அருகே சாலையில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஒட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மதுக்கூர் பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பைகள் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது. மதுக்கூரிலிருந்து மூத்தாக்குறிச்சிக்கு செல்லும் சாலை ஓரங்களில் ஒரு சிலர் பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் மற்றும் குப்பைகளை ஆங்காங்கே சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் உருவாகும் புகை மூட்டம் வாகன ஒட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, சாலையின் ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பெரும்பாலும் அள்ளப்படுவதில்லை. குப்பைகளுக்கு நான்தோறும் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் சாலை முழுவதும் தொடர்ச்சியாக புகை மூட்டம் ஏற்பட்டு வருகிறது.
புகைமூட்டத்தால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குக்குள்ளாகி வருகிறார்கள். எனவே மதுக்கூரில் இருந்து மூத்தாக்குறிச்சிக்கு செல்லும் மெயின் சாலை பகுதியில் குப்பைகளுக்கு தீ வைக்காமல் குப்பைகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தொடர்புடைய செய்தி