பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் தலைவராக ஆதித்தியன், செயலாளராக ஆசிரியர் செல்வகுமார், பொருளாளராக ராமசாமி ஆகியோர்களை பணியில் அமர்த்தி முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் வீரபாண்டியன் பேசினார். மாவட்ட நிர்வாக அலுவலர் இராஜன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து பேசினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த ஆண்டு புது முயற்சியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் 8 பேருக்கு ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் நிதி பெறப்பட்டு ஆடுகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்க தலைவர் ஆதித்தியன் கூறியது, முன்னாள் லயன்ஸ் சங்க தலைவர்கள் கனகராஜ், பன்னீர்செல்வம், இராமநாதன் ஆகியோர் ஆலோசனையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் 8 பேருக்கு ஆடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆடுகள் வாங்கிய பயனாளிகள் முதல் 6 மாதத்தில் ஆடு போடுகின்ற முதல் குட்டியை சங்கத்திற்கு கொடுத்துவிட வேண்டும். தாய் ஆட்டை பயனாளி தொடர்ந்து பராமரித்து அதன்மூலம் கிடைக்கின்ற வருவாயை அடைந்து கொள்ளலாம். பயனாளி மூலம் சங்கத்திற்கு வழங்கப்படும் ஆட்டுக் குட்டி வேறு ஒரு பயனாளிக்கு வழங்கப்படும், இது தொடர்ச்சியாக நடைபெறும் என்றார்.