பட்டுக்கோட்டை நகரில் உள்ள சில பழக்கடைகளில் ஆப்பிள் வாங்கி ஆப்பிளின் தோல் பகுதியை சுரண்டி பார்த்தபோது அதன் மேல் மெழுகு பூசப்பட்டது போன்று இருந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பழக்கடைகளில் பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது ஆப்பிள்களில் மெழுகு தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 45 கிலோ ஆப்பிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளில் ஆப்பிள் உணவுமாதிரி எடுத்து சென்னை உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் கூறுகையில் மெழுகு தடவிய ஆப்பிள் பழங்களை சாப்பிடும் போது வயிற்றுக்கோளாறு, செரிமான பிரச்சனை, தொண்டை வலி போன்ற உபாதைகள் ஏற்படும். தரம் குறைவாக, சாப்பிட தகுதியற்ற பழங்களை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன்படி குற்றவியல் வழக்கு தொடரப்படும் என எச்சரித்ததுடன், 2 பழக்கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்