புது ஆறு கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்- நோய் பரவும் அபாயம்

தஞ்சாவூர் வழியாக பாசனத்திற்கு செல்லும் கல்லணை கால்வாய் ஆறுகளில் புது ஆறு ஒன்றாகும். இது தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. மேலும் 600க்கும் மேற்பட்ட ஏரி குளங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த புது ஆறு மாசுபட்டு வருவது சமூக ஆர்வலர்களை கவலை அடையச் செய்து வருகிறது. ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதும், கொட்டப்படும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் சாந்த பிள்ளை கேட் பகுதியில் செல்லும் புது ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் நிறைந்து செல்லும்போது குப்பைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. மேலும் ஒரு சிலர் இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி வந்து ஆற்றின் கரையில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் புது ஆற்றின் நீர் மாசுபடுவதோடு குப்பைகள் பாலங்களில் சிக்கிக் கொண்டு தண்ணீர் வேகமாக செல்வதற்கு தடையாக இருக்கிறது. எனவே புது ஆற்றின் கரைகளில் குப்பைகள் கொட்டுவதற்கும் தீ வைத்து எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புது ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும், நோய் தொற்று ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி