தஞ்சை: உளுந்து விளைச்சல் கூட இதை செய்ங்க

உளுந்து பயிர் சாகுபடியின் போது உரிய பருவம், ரகம், விதைநேர்த்தி, உரமிடுதல், நுண்ணுயிர் உரம் இடுதல், விதைப்பு முறை, பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி இலை வழி உரமிடும் முறைகளை கடைபிடித்தால் 50 சதவீத விளைச்சல் அதிகரிக்கும். 

இதுதவிர, 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசலை உளுந்து பயிர் பூக்கும் பருவத்தை அடைந்ததும், அதன் பின்னர் 15 நாட்களுக்குப் பிறகு மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை முதல் நாள் 10 லிட்டர் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் தெளிந்த கரைசலை வடிகட்டி, அவ்வடிகரைசலுடன் 190 லிட்டர் தண்ணீரை கலந்து 200 லிட்டராக கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும். 

இவ்வாறு தெளிப்பதால், பயிருக்குத் தேவையான தழை மற்றும் மணிச்சத்துகள் உடனடியாக இலைகள் மூலம் கிடைக்கின்றன. மேலும் கரைசலை தெளிக்க, மாலை நேரம் தான் சரியானது ஆகும். இதேபோல் இலைகளில் கரைசல் நன்றாகப் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கப்படுகிறது. 

தேவைக்கு அதிகமாக அதாவது, 2 சதவீதத்திற்கு அதிகமாக டி.ஏ.பி. கரைசலை தெளித்தால் இலைகள் கருகிவிடும். எனவே நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டும் டி.ஏ.பி கரைசலை உபயோகித்து விளைச்சலை பெருக்கலாம் என்று வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி