பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவர் வெள்ளிக்கிழமை காலை முதல்சேரி கிராமத்தில் உள்ள முனுசாமி என்பவரின் புதுமனை புகுவிழாவுக்குச் சென்றிருந்தார். அப்போது சுசிலாவின் அக்கா கண்ணகியின் மகனான பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்த ஜவுளிக்கடை வைத்துள்ள ஜெயபால் மகன் அன்பழகன் (30), சுசிலாவை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றார்.
இதையடுத்து அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சுசிலா இறந்தார். தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சுசிலாவின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து நடத்திய விசாரணையில் சொத்துப் பிரச்னையில் இக்கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அன்பழகனை போலீசார் தேடுகின்றனர்.