அதிராம்பட்டினம்: சுற்றுலா வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சாணங்கரை, வெட்டதுரா பகுதியில் இருந்து ஒரு குழந்தை உள்பட 13 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வேனில் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் சுற்றுலா வேனில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை மறவக்காடு உப்பளரோடு பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்துள்ளது. 

இதனால் டிரைவர் நாய் மீது மோதாமல் இருக்க திரும்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வேனில் இருந்த சோபிக் (24), பினு (54), பினோய் (22), ஆரித்தையின் ரோபின் (7), ஆயிட்டா (54), ஸ்டீபன் (58) ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த 6 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி