வலங்கைமான்: வழக்குரைஞர் கொலை; சிபிசிஐடிக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட முனியூரைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கே. ராஜ்குமார். இவரை அவமானப்படுத்தும் விதமாக அரித்துவாரமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு தொடர்புடைய காவல் அலுவலர் மிரட்டியதை ராஜ்குமார் ஏற்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில், ராஜ்குமார் 2020, அக்.12 ஆம் தேதி கொல்லப்பட்டார். இதையடுத்து இவரின் மனைவி சந்தியா, இந்த வழக்கை புகாருக்கு உள்ளான தொடர்புடைய காவல் அலுவலர் பதிவு செய்ததால், இந்த வழக்கு முறையாக நடத்தப்பட்டு நீதி வழங்கப்படாது, எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அப்போது இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால், சந்தியாவின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், சந்தியா உச்ச நீதிமன்றத்தை அணுகி சிபிசிஐடி விசாரணை கோரினார்.

அதற்கு உச்சநீதிமன்றம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணுமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சந்தியா தொடர்ந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கைக் காவல் துணைக் கண்காணிப்பாளர் நிலையிலான சிபிசிஐடி காவல் பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்றும், கூடுதல் குற்றப் பத்திரிகையை ஏப்ரல் 22-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி