இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. 900 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்வில், கலந்துகொண்ட முதல்வரை சந்திக்க, கரும்பு விவசாயிகள் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து இன்று காலை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், திருவையாறு தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள திருமண மண்டபத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில், காத்திருந்த விவசாயிகள் திடீரென முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் வருவதை கண்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்பு கொடிகளுடன், முதல்வருக்கு எதிராக கோஷமிட்டு, சாலையில் ஓடி வந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, விவசாயிகளிடம் இருந்த கருப்பு கொடிகளை பறிமுதல் செய்தனர். மேலும், 12 விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.