தஞ்சை: ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு..அமைச்சர்

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவை. செழியன், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். 

வரும் 16-ம் தேதி சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேட்டூர் அணையில் முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் விதை நெல், இடுபொருட்கள் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவை தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அதேபோல், கடைமடை வரை தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும். கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், மாணவப் பிரதிநிதிகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் என 7 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தக் குழுவினர் மாணவர்கள் கல்லூரிக்கு வருவது முதல், கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வது வரை கண்காணிப்பர். மேலும், கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் ராகிங் குற்றம் நடைபெறாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி