கல்வி மூலம் சுதந்திரம் அடையலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, சென்னையிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலம் சுற்றுலா பயணத்தை டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கினர்.
இதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 21 பேர் 9 ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் ஆட்டோக்களில் ஏறத்தாழ 1,500 கி.மீ. பயணம் செய்து நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரம், பழக்க வழக்கங்களையும் அறிந்து வருகின்றனர்.
சென்னையில் புறப்பட்ட இப்பயணிகள் புதுச்சேரி, கடலூர், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை இரவு வந்தனர். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பெரிய கோயிலுக்கு சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றனர். மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்தில் ஜனவரி 6 ஆம் தேதி இப்பயணத்தை நிறைவு செய்கின்றனர்.