தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சுகந்தி. இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டதால், கணவர் பெயரில் உள்ள சொத்துகளை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, கொல்லாங்கரை கிராம நிர்வாக அலுவலர் எம். வி. வள்ளி (54) என்பவரிடம் விண்ணப்பித்தார்.
பல நாட்கள் சுகந்தியை அலையவிட்ட பின்னர், ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டாவை மாற்றித் தருவதாக வள்ளி கூறியுள்ளார்.
இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுகந்தி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஏடிஎஸ்பி (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர்கள் பத்மாவதி, சரவணன் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை கொல்லாங்கரை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே மறைந்திருந்தனர்.
அப்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறிய அறிவுரையின்படி, ரசாயன பவுடர் தடவிய லஞ்சப் பணம் ரூ. 2 ஆயிரத்தை சுகந்தி கிராம நிர்வாக அலுவலர் வள்ளியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வள்ளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வள்ளியை சிறையில் அடைத்தனர்.