தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வனக்கோட்டம் சார்பில் நடைபெற்ற வனப் பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்கள் குறித்த பயிற்சி நிறைவு விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 40 லட்சம் செலவில் வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், அந்த ஆசிரியர்கள் மூலம் 25 பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை மற்றும் வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்து 3 வார காலப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு அமைச்சரின் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.