ஒரத்தநாடு: அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய 2 பேர் கைது

ஓரத்தநாடு அருகில் உள்ள கண்ணுகுடி பகுதியில் அனுமதியின்றி ஏரி பகுதிகளில் மண் அள்ளி வாகனங்கள் மூலம் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாப்பாநாடு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணுகுடி ஏரி அருகே மண் ஏற்றி வந்த டிராக்டர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கண்ணுகுடி பகுதி ஏரியிலிருந்து மண் அள்ளி டிராக்டர்கள் மூலம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களையும், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களையும் போலீசார் பாப்பாநாடு போலீஸ நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதி இன்றி மண் அள்ளி கடத்திய கண்ணுகுடி பகுதியைச்சேர்ந்த சூர்யா (வயது26), அஜித் (29) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து பொக்லின் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி