தஞ்சை: நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே மர்மநபர் ஒருவர் வியாழக்கிழமை மஞ்சள் பையை வீசிச் சென்றார். அங்கிருந்த நீதிமன்றப் பணியாளர்கள் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு பேப்பரில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. 

இதுகுறித்து மாவட்டக் கூடுதல் உரிமையியல் நீதிபதி ஜெ.ராதிகா, கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் சிங்கிற்கு தகவல் தெரிவித்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. 

பின்னர் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், மர்மநபர் ஒருவர் மஞ்சள் பையை வீசிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர், அம்மாசத்திரத்தைச் சேர்ந்த ராஜா மகன் ராஜேஷ் (35) கூலித்தொழிலாளி என்பதும், சற்று மனநிலை பாதித்தவர்போல் இருப்பார் என்பதும் தெரியவந்தது. கிழக்கு காவல் நிலையப் போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி