கும்பகோணம்: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி

கும்பகோணம் மாதுளம்பேட்டை புது ராமகிருஷ்ணா நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அன்பரசன் (42). இவரது மனைவி கலைவாணி(38). இவா்களுக்கு மாரிச்செல்வன் (12), நேச மணிகண்டன் (9) என்ற இரண்டு மகன்கள் உள்ளனா்.

அன்பரசன் திருப்புவனத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்தாா். அப்போது, அங்கு வேலை பாா்த்த ஒரு பெண்ணுடன் பழகியுள்ளாா். இதை மனைவி கலைவாணி கண்டித்ததால், அன்பரசன் பேக்கரி வேலைக்கு செல்லவில்லை. ஆனாலும், அந்தப் பெண்ணுடன் தொடா்பில் இருந்து கைப்பேசி மூலம் பேசி வந்தாராம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அன்பரசன் மது போதையில் வீட்டுக்கு வந்தாா். அப்போது, தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலைவாணி கணவா் தூங்கும்போது அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டாா். இதில் பலத்த காயம் அடைந்த அன்பரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் கலைவாணி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

காவல் ஆய்வாளா் பா. ரமேஷ் நிகழ்விடத்துக்கு சென்று அன்பரசன் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தொடர்புடைய செய்தி