கும்பகோணம்: மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் வாழை, நெல் பயிா்கள்

கும்பகோணத்தை அடுத்துள்ள எள்ளுக்குட்டை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தாழ்வான பகுதியான இங்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வயலில் மழை நீர் தேங்கிநின்றது. தண்ணீர் வடிவதற்கான வழியில்லாததால் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜத்திடம் நேரில் முறையிட்டனர். ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் எள்ளுக்குட்டை பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டனர். தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை இருப்பதாக தெரிவித்துச் சென்றனர். 

இதனால் விவசாயிகள் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்தனர். விவசாயி சந்திரசேகர் கூறியது, இப்பகுதியில் வயலில் சுமார் 2 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில், கரும்பு, நெல், வாழை பயிர்கள் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ரூ. 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி