கும்பகோணம்: தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம் தாராசுரம் வெள்ளாளா் தெருவைச் சேர்ந்தவா் செந்தில்நாதன் (29). தாராசுரம் சந்தை சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், தாராசுரம் அனுமார் கோயில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணனுக்கும் இடையே பணத் தகராறு இருந்தது. இந்நிலையில் கடந்த 2009, நவம்பர் மாதம் சந்தையிலிருந்து வெளியே வந்த செந்தில்நாதன் கொல்லப்பட்டார். 

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்களான தாராசுரம் பகுதி எம். திருநாவுக்கரசு (41), கே. இளங்கோவன் (41), ஏ. விக்னேஷ் (40), மதுரை அருகே செல்லூர் ஏ. பாண்டி (40) உள்பட 9 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது லட்சுமணன் காலமானார். இந்நிலையில் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. ராதிகா திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 3 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றொருவர் தலைமறைவாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி