தென்காசி: நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ள நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர் உள்பட 24 பேர் அளித்த மனு விவரம்: சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

எவ்வித பணிகளுக்கும் அனுமதி வழங்குவதில்லை. அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் கூறும் பணிகளை இதுவரை செயல்படுத்தவில்லை. பணிகளுக்கு கையூட்டு பெறுகிறார். குடிநீர் வழங்கல், காலை உணவு திட்டம், வாறுகால் தூர்வாருதல், சுகாதாரப் பணிகள் போன்றவை சரிவர நடைபெறாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். நகராட்சி கூட்டம் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை தான் நடத்துகிறார். இதனால் மக்களிடம் பதில் கூற முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். 

எனவே, அவரை நகர்மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த 31.10.23 இல் அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி