சங்கரன்கோவிலில் 4 பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் கடந்த மே மாதம் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் குறையுடைய வாகனங்கள் பழுதுநீக்கப்பட்டனவா எனவும், உரிய அனுமதி பெற்று இயங்குகின்றனவா எனவும் சோதனையிட ஆட்சியர் ஏ. கே. கமல்கிஷோர் உத்தரவிட்டார். 

அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. செல்வி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன், ஊழியர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று பெறாமல் இயங்கிய கல்லூரிப் பேருந்து, தகுதிச் சான்று பெறாத 2 பள்ளிப் பேருந்துகள், பதிவு செய்யப்படாத புதிய பள்ளிப் பேருந்து ஆகிய 4 பேருந்துகளைப் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுசென்றனர். 

பதிவு செய்யப்படாமலும், அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று ஆகியவை பெறாமலும் இயக்கப்படும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி