தூத்துக்குடியில் படகு தீவைத்து எரிப்பு.. வாலிபர் கைது

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மீன்பிடி நாட்டுப்படகை தீவைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பீச் ரோடு, இனிகோ நகரைச் சேர்ந்தவர் பாப்பு மகன் ஜேசுராஜ் (38), இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது உறவினரின் மகளை அதே பகுதியைச் சேர்ந்த சகாயம் மகன் ராபின் (22) என்பவர் காதலித்து வந்தாராம். இந்த காதல் விவகாரம் ஜேசுராஜுக்கு தெரியவரவே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த ராபின், இனிகோநகர் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த ஜேசுராஜுக்குச் சொந்தமான படகை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தாராம். இதில் படகின் இன்ஜின், வலைகள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. இதுகுறித்து ஜேசுராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து ராபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தொடர்புடைய செய்தி