தென்காசி: குற்றாலத்தில் 8 ம் தேதி திருவாதிரை விழா தேரோட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மார்கழி மாத திருவாதிரைத் திருவிழா முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டு திருவாதிரைத் திருவிழா கடந்த சனிக்கிழமை அன்று திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து அப்பர் திருவீதி உலா, உழவார்ப் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 12ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சப்பர உள்பிரகார வீதி உலா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி காலையில் நடராஜர் பஞ்சமூர்த்திகள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. ஐந்து தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. வரும் 11ம் தேதி சித்திரசபையில் நடராஜப் பெருமானுக்கு பச்சைச்சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 13ம் தேதி அதிகாலையில் 5 சபைகளில் ஒன்றான சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு ஆருத்ரா தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும், பின்னர் திரிகூடமண்டபத்தில் நடராஜருக்கு ஆருத்ரா தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி