செங்கோட்டை: விபத்தில் சிறுவன் பலி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பாண்டியர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். தென்காசி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நவேதன் கெளசிக் (7), ஆய்க்குடி அனந்தபுரத்தில் 1ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தாத்தா வேலுச்சாமி (70), செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து தனது பைக்கில் நவேதன் கெளசிக்கை அழைத்துக்கொண்டு கணக்கப்பிள்ளைவலசை வழியாக வந்துகொண்டிருந்தார். 

அப்போது, சுரண்டையிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவரது பைக் மீது மோதியதாம். இதில், கீழே தவறி விழுந்து பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இலத்தூா் போலீஸாா், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநர் செங்கோட்டை மேலூர் பம்ப் ஹவுஸ் சாலையை சேர்ந்த மு. காதர் ஹூசைனிடம் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி