கடையநல்லூரில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தினசரி சந்தை அருகே குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 16 குழந்தைகள் விளையாட்டுடன் கூடிய கல்வியை கற்று வருகின்றனர். மேலும் இங்கு குழந்தைகளுக்கு தேவையான சத்து உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் குழந்தைகள் மைய கட்டடமானது போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது. இதையறிந்த கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல், நன்கொடையாளர்கள் மூலம் கட்டடத்தில் வண்ணங்கள் தீட்டி மின்விசிறி ஒளி விளக்குகள் பொருத்தி புனரமைக்க நடவடிக்கை எடுத்தார். 

இதற்கு தலைமைக் காவலர்கள் முத்துராஜ், சங்கர், காளிராஜ் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டு கட்டடம் புதுப்பொலிவு பெற வழிவகுத்தனர். காவல்துறையினரின் இந்தப் பணியை பெற்றோர்கள் பாராட்டினர். சீரமைக்கப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை (மார்ச் 24) நடைபெறுகிறது. இதில் நகரமன்றத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான், ஆணையர் ரவிச்சந்திரன், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பர்கத் சுல்தானா, மற்றும் நன்கொடையாளர்கள் முகமது ஜாவித், பீரப்பா, சமூக ஆர்வலர் சகிலாபானு சுலைமான், தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் அலங்கார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி