தென்காசி: அருவிகளில் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலை குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. பேரருவியில் நள்ளிரவு முதல் தண்ணீர் அதிகளவில் வரத் தொடங்கியது. 

இதையடுத்து அந்த அருவியிலும், அதனைத் தொடர்ந்து ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளையைத் தாண்டியும், ஐந்தருவியில் கிளைகளே தெரியாத அளவிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி