தென்காசி: பழுதடைந்த துணை சுகாதார நிலையம்.. நோயாளிகள் அச்சம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் மேலகிருஷ்ணப்பேரி ஊராட்சி முத்துகிருஷ்ணப்பேரி கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊராட்சி அலுவலகம் எதிரேயுள்ள துணை சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கவனிப்பில் உள்ளனர். இக்கட்டடம் மற்றும் அருகில் உள்ள நல வாழ்வு மையம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை ஆகும். போதிய பராமரிப்பின்மை காரணமாக இந்தக் கட்டடங்கள் மிகவும் பழுதடைந்தும் மேற்கூரைகள் பேரிந்தும் காணப்படுகின்றன. 

மேலும், அங்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் மூடப்படாமல் உள்ளதால் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேற்கூரையின் கான்கிரீட் துகள்கள் பேரிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் ஊழியர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர். இடியும் தருவாயில் உள்ள இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி