இக்கோவில் அருகே உள்ள கருவேல்குறிச்சி மணிமுத்தாறு ஆற்றில் ஆண்டுதோறும் கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த புராணத்தை விளக்கும் கஜேந்திர மோட்சம் என்னும் விழா நடைபெற்று வருகிறது. அகஸ்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திர யானையாக சாபம் பெற்ற மன்னனும், முனிவரிடம் முதலையாக சாபம் பெற்ற கந்தர்வனுக்கும் ஸ்ரீ விஷ்ணு பெருமாள் சக்கராயுதத்தால் சாப விமோசனம் அருளினார். விழாவை முன்னிட்டு, முன்னதாக உற்சவர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் ஆடும் பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பாடாகி மணிமுத்தாறு ஆற்றின் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மணிமுத்தாற்றில் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் கோவில் யானை வரவழைக்கப்பட்டு கஜேந்திர மோட்ச பூஜையை பட்டாச்சாரியார்கள் நடத்தினர். அப்போது கஜேந்திர யானை ஆற்றுக்குள் இருந்து மூன்று முறை பிளிறியது. அப்போது பெருமாளின் சந்தனம் மற்றும் சடாரி ஆண்டாள் யானைக்கு சாத்தப்பட்டது.