பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, நலிவுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. 

இந்த விழாவுக்கு கல்வி, சமூக நல அறக்கட்டளை நிறுவனர் அண்ணாமலை தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுவர் பூங்காவைத் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தலைமை குருக்கள், பிச்சைக் குருக்கள் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர். அறக்கட்டளை சார்பில் பூங்கா, பிள்ளையார்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. மேலும், பிள்ளையார்பட்டி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து, கற்பக கலையரங்கில் தமிழ் வளர்ச்சி விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற 12 பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக சேவையாளர்கள் 16 பேர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நலிவுற்றோர் 103 நபர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. கரம்பக்குடி வட்டாட்சியர் ஜமுனா, சிவகங்கை ஐஆர்சிடிஎஸ் தலைவர் ஜீவானந்தம், திருப்பத்தூர் மணிகண்டன், மருத்துவர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி