சிவகங்கை: புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி வேன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ். வி. மங்கலம் கிழக்குப்பட்டியில் புளிய மரத்தில் ஆம்னி வேன் மோதி முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மதுரை மாவட்டம் மணல்மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாயழகன் (வயது 62) இவர் முன்னாள் அரசு பேருந்து பணிமனை மெக்கானிக் ஆவார். இவர் வீட்டிலேயே சொந்தமாக முறுக்கு அதிரசம் போன்ற தின்பண்டங்கள் தயாரித்து, வெளியில் இருந்து வாங்கியும் அவற்றை மொத்தமாக கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். வழக்கம்போல் மணல்மேட்டுப்பட்டியில் இருந்து தின்பண்டங்களை ஏற்றிக்கொண்டு அதிகாலை பொன்னமராவதி திருப்பத்தூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனை செய்ய ஆம்னி வேனை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். 

அப்போது எஸ். வி. மங்கலம் கிழக்குப் பட்டியில் தூக்க கலக்கத்தில் தாறுமாறாக ஓடிய ஆம்னி வேன் புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. டமார் என பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் வந்து பார்த்தபோது அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி வேனில் படுகாயத்துடன் சிக்கி இருந்த மாயழகனை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயழகன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எஸ். வி. மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி