சிவகங்கை: ஜோதி விநாயகர் கோயிலில் நேர்த்திகடன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஓசாரிபட்டியில் கிராம தெய்வமாக அருள்பாலிக்கும் ஸ்ரீநாகம்மாள் கோவிலில் 11-ம் ஆண்டு பால்குடம் ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஓசாரிபட்டியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள சிங்கம்புணரி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அருள்பாலிக்கும் ஜோதி விநாயகர் ஆலயம் முன்பு சாமி ஆட்டம் ஆடினர். அங்கு ஆண் பக்தர்களுக்கு அருள் வந்தவுடன் 16 அடி சிலார் (அலகு) குத்தி சாமியாட்டம் ஆடினர். அதை தொடர்ந்து ஜோதி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வழி நெடுகிலும் சிலார் குத்திய ஆண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் ஓசாரிபட்டியில் உள்ள நாகம்மாள் கோவிலை நோக்கி சென்றனர். ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து உடன் சென்று ஓசாரிபட்டியில் உள்ள நாகம்மாள் கோவிலை சென்றடைந்தனர். அங்கு சிலார் குத்திய பக்தர்களும், தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்களும் நேர்த்திக்கடன் வைத்த பக்தர்களும் தகதகவென அனல் கொதிக்கும் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிலார் (அலகு) குத்தி மெய்சிலிர்க்க வைத்த சாமியாட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி