சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொன்னாங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் போற்றப்படும் புனித சவேரியார், புனித அருளானந்தர் ஆகியோர் இந்த ஆலயத்திற்கு வந்து திருப்பலி நிறைவேற்றியுள்ளனர். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தேர் பவனி என்ற சப்பரத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி இந்த ஆலயத்தில் தொடர்ந்து தினமும் மாலை நேரங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய விழாவான தேர் பவனி விழா தொடங்கும் முன்பு, புனித சவேரியார் ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார்கள் ஆலயத்திலிருந்து சென்று நாட்டார்கள் மற்றும் இந்துக்களை சந்தித்து விழாவிற்கு வருமாறு நெற்றியில் சந்தனமிட்டு அழைப்பு விடுத்தனர். அதனையடுத்து அவர்களின் அழைப்பினை ஏற்ற நாட்டார்கள் மற்றும் இந்துக்கள் மாலை உள்ளிட்ட சீர்வரிசையுடன் புனித சவேரியார் ஆலயத்திற்கு வந்தனர். அவர்களை கிறிஸ்துவ பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.