சிவகங்கை: டீக்கடைக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்.. பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் ஆம்புலன்ஸில் சிங்கம்புணரி வந்துள்ளார். பின்னர் சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்குச் செல்வதற்காக ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். தீயணைப்பு நிலையம் அருகே எதிர்திசையில் மதுரையில் இருந்து எஸ்.வி.மங்கலம் நோக்கிச் சென்ற தனியார் வாடகை கார் மீது பின்புறத்தில் மோதி தாறுமாறாகச் சென்று எதிரே சாலையோரம் வடிவேலு என்பவரது டீக்கடைக்குள் புகுந்து மோதியுள்ளது. 

இந்த விபத்தில் டீக்கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி உடைந்து சிதறியது. டீ போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சூடான பால் பாத்திரம், வடை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சூடான எண்ணெய்க் கடாய் என அனைத்தும் மோதி தூக்கி வீசியதில் சிதறியது. டீக்கடையை நோக்கித் தாறுமாறாக ஆம்புலன்ஸ் வருவதைக் கண்டு வடிவேலு கடையின் உள்ளே ஓடியதால் உயிர் தப்பினார். சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தைக் கைப்பற்றி சோதனை செய்தனர். 

ஆம்புலன்ஸின் உள்ளே உடைக்காத பீர் பாட்டில், ஸ்டேரிங் டேஸ் போர்டு முன்பகுதியில் பட்டாணி, கடலை, ஊறுகாய் உள்ளிட்டவை இருந்தது. இதனையடுத்து சிவக்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி