சிவகங்கை: மறைந்தார் ‘கிராமக்குயில்’ கொல்லங்குடி கருப்பாயி

சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில், அந்த ஊரின் சிறப்பாகத் திகழ்கிறது. இந்த ஊரில், ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த கருப்பாயி, தனது இயல்பான நாட்டுப்புற பாடல்களால் அந்தக் கிராமத்திற்கு பெருமை சேர்த்தவர். இவர் பாடிய பாடல்கள், அப்போதைய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தெ. காத்தமுத்துப்பிள்ளையின் முயற்சியால், ஆண்டுதோறும் விவசாய வேலைகள் தொடங்கும் நேரத்தில் வயல் வெளிகளில் ஒலித்தன. அவரின் கருப்பு குரலில் ஒலித்த பாட்டுக்கள், அகில இந்திய வானொலி வாயிலாக சுமார் 30 ஆண்டுகள் உலகமெங்கும் ஒலித்தன. 

பின்னர் இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் அவரைப் கவனித்து, 'ஆண்பாவம்' திரைப்படத்தில் நடிக்க வைத்ததுடன், சில பாடல்களையும் பாடச் செய்தார். அதன் பின்னர், 'ஆயுசு நூறு' மற்றும் 'கோபாலா கோபாலா' ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார். நாட்டுப்புற பாடல்களில் முன்னோடியாகக் கருதப்படும் இவருக்கு, 1993-ஆம் ஆண்டு தமிழக அரசின் 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சோக நிகழ்வுகள், திரைத்துறையிலிருந்து விலகச் செய்தன. பாடல் ஒலிப்பதிவிற்குச் சென்றிருந்தபோது கணவர் மரணமடைந்ததால் திரைக்கலையிலிருந்து ஒதுங்கினார். அதையடுத்து தனது மகளையும் இழந்ததால், கொல்லங்குடி வீட்டில் தனிமையில் வாழ்ந்தார். வயது முதிர்வு காரணமாக காலமானார்.

தொடர்புடைய செய்தி