பி. எஸ். சி ரேடியோதெரபி படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் 2012 முதல் எம். பி. பி. எஸ். , மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்கள் மருத்துவம் முடித்து செல்கின்றனர். இது தவிர முதுநிலை மருத்துவ படிப்பும் துவக்கப்பட்டுள்ளன. மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, விபத்து காய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட துறைகளில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இது தவிர துணை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டிற்கு 'லேப் டெக்னீசியன்' படிப்பிற்கு 100 சீட், அனஸ்தீசியா மற்றும் தியேட்டர் டெக்னீசியன் படிப்பிற்கு தலா 20 சீட், ரேடியோலஜி டெக்னீசியன் படிப்பிற்கு 10 சீட் வரை ஒதுக்கி, கடந்த 5 ஆண்டாக வகுப்பு நடந்து வருகிறது. இங்கு துணை மருத்துவ படிப்புகள் நடைபெற்ற போதும், பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு முடித்த மாணவர்கள் பெரும்பாலும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் இப்படிப்பு இருப்பது குறித்த விபரங்கள் தெரிவதில்லை இதனால் ஆண்டு தோறும் துணை மருத்துவ படிப்பில் இங்கு சேர்வதற்கு மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. இனி வரும் காலங்களிலாவது சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் துணை மருத்துவ படிப்புகளில் சேர்ந்து பயன் பெற வேண்டும். இக்கல்லுாரி துவங்கி 12 ஆண்டுகளை கடந்த போதும், துணை மருத்துவ படிப்புகள் காலதாமதமாக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்லுாரிக்கு பின் துவங்கிய புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரியில் பி. எஸ்சி. , நர்சிங் உட்பட அனைத்து துணை மருத்துவ படிப்புகளும் துவக்கப்பட்டுள்ளதாக, அரசுக்கு புகார் சென்றது. இதையடுத்து, இக்கல்வி ஆண்டு முதல் பி. எஸ்சி. , ரேடியோ தெரபி படிப்பிற்கு 10 மாணவர்களை சேர்த்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை சிவகங்கை மாவட்ட மாணவர்கள் பயன்படுத்தி, துணை மருத்துவ படிப்புகளில் சேர முன்வரவேண்டும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி