நகை அடகுக்கடை கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

சிவகங்கை அருகே மதகுபட்டியில் ஏழு மலையான் பைனான்ஸ் என்ற நகை அடகு கடையில் கடந்த ஜூன் 8 -ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் பின்புற சுவரில் துளை போட்டு கடைக்குள் நுழைந்து லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள 300 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

கடையில் செக்யூரிட்டி விடுறையில் சென்றது, சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருந்தது உள்ளிட்டவைகளை அறிந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து
கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப் படையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும் இதே முறையில் நடைபெற்ற கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தகவல்களை பெற்று, அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மதகுபட்டி கொள்ளையில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், குளத்துறை சேர்ந்த பாண்டியன்(33), திம்மமலையைச் சேர்ந்த பழனி(45), திருமலை நகரைச் சேர்ந்த வேலாயுதம்(46) ஆகிய மூவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் இக்கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி