சிவகங்கை: தள்ளாடும் வயதில் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள T. புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மைக்கல் ராஜ் (60) மற்றும் போதும் பொண்ணு (55) தம்பதியினர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் கஷ்டத்தை தாங்கி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்ந்து வருகின்றனர். மைக்கல் ராஜ் மயானத் தொழிலாளியாகவும், போதும் பொண்ணு புதுக்கோட்டை பஞ்சாயத்தில் துப்புரவுப் பணியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையில் இவர்களது வீட்டின் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. 

பல ஆண்டுகளாக விரிசல் அடைந்து காணப்படும் இந்த வீட்டினை கட்டித் தர வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இவர்கள் வசித்து வரும் இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பதால், தங்களுக்கு சொந்த இடமோ வீடோ இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், விஷ ஜந்துக்கள் இரவு நேரங்களில் தொந்தரவு செய்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு தங்களுக்கு சொந்த இடம் மற்றும் வீடு கட்டித் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தொடர்புடைய செய்தி