சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலூர் நத்தை புரக்கி விலக்குப்பகுதியில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு குத்துக் கற்கள் காதல் ஜோடியாகக் கருதப்படுகின்றன. இப்பகுதி மக்கள், ஆடு மாடு மேய்க்கும் போது பழகி, பெற்றோரின் எதிர்ப்பால் ஊரை விட்டு ஓடிய காதல் ஜோடி, இடி தாக்கி கல்லாக மாறியதாக நம்புகின்றனர். இன்றும் தங்கள் வாழ்வு வளம்பெற மக்கள் இக்கற்களுக்கு மாலை அணிவித்து வழிபடுகின்றனர். ஐந்து அடி மற்றும் ஏழடி உயரமுள்ள இவை, செம்புராங்கல்லால் ஆனவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொன்மையை உணர்த்தி நிற்பதாக சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா தெரிவித்தார்.